பாற்கடலின் ஆழத்திலிருந்து...


எழுத்தாளர்களிடம் அவர்களின் எழுத்தில் யாருடைய தாக்கம் இருக்கிறது என்று கேட்டால் அவர்களால் என்ன தான் சொல்லமுடியும். அவர்கள் படித்தது. படித்ததில் பிடித்தது. பிடித்ததின் உருவம் மற்றும் அமைப்பு. உருவத்தினுள்ளே நடமாடும் அருவம். சந்தித்த மனிதர்கள். மனிதர்களின் செய்கைகள். செய்கைகளின் முரண்பாடு. முரண்பாட்டினுள் முரண்பட்டு கிடக்கும் உடன்பாடு. தான் சிந்தித்தது. தனக்கு புரிந்தது. புரியாதது. புரிய முடியாதது. தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளின் அலைகள். உள்ளத்தில் அது சேர்க்கும் மணல்கூடுகள். உள்ளக்கரையில் கரையும் சிந்தனையின் அறைகூவல். இவையெல்லாம் சேர்ந்து உயிர்பெறும் - எழுத்தாளர்களின் படைப்பில்.

அப்படிப்பட்ட எழுத்தை படிப்பவர்கள் படிக்கும்போது ரஸவாதமே நிகழும். அந்நிகழ்வு அத்தருணத்தைப் பொறுத்தது. எழுத்தின் தாக்கமும் அதனுள் மறைந்திருக்கும் வீர்யமும் படிப்பவர்களையும் எழுத்தாளர்களையும் ஒன்று சேர்த்து ஓர் உறவை ஏற்படுத்தி விடும். அப்போது எழுத்தாளனும் இல்லை. படிப்பவனும் இல்லை. எழுத்தின் வீர்யம் மட்டும் உருக்கொண்டு விஸ்வரூபம் எடுத்து மனவெளியில் பாய்ந்து ஓடும். மனம், எண்ணம் முழுவதையும் வியாபிக்கும்.

அந்த மாதிரி நடை லா. . ரா. வுக்கு கைவந்த கலை. லா. . ரா. வின் எழுத்து ஒரு பாற்கடல். அதிலிருந்து சில துளிகளை நாம் பார்க்கப் போகிறோம்.

ஒரு கேள்வி எழுகிறது. லா. . ரா. என்று அழைக்கப்படும் லா. . ராமாமிருதத்திற்கு அறிமுகம் தேவையா? 1937-லிருந்து தனது தனிப்பாணியில் எழுதிக்கொண்டிருக்கும், எழுதுவதைத் தவமாய் நினைக்கிற - மற்றும் மணிக்கொடி எழுத்தாளர்களில் ஒருவரான - லால்குடி சப்தரிஷி ராமாமிருதத்திற்கு அறிமுகம் தேவையா?

அறிமுகமா? அறிந்த முகமா? இல்லை அறியும் முகமா? அறிய முயற்சிக்கும் முகமா? எல்லாமே சரிதான்.

அறிமுகம் செய்யும்போது பொதுவாக நாம் அந்த பொருளின் மற்றும் மனிதர்களிலிருந்து தனித்து இருப்போம். இது கிணறு. இதுதான் அந்த இடம். ! இதுதானா? உள்ளே புரிதலின் வெளிப்பாடு. இவள் வசுமதி. இவளா? எவ்வளவு எளிமையாக இருக்கிறாள்; அழகாக அன்பாக பழகுகிறாள். அறிமுகத்தில் உடனே உள்ளே பிரமிப்பும் ஆசையும் ஒருங்கே உருவாகும். இது கண்ணாடி என்று அறிமுகம் செய்கையில் - அதைப் பார்க்கையில் - நாம் தனித்து இருக்க முடியாது. கண்ணாடியில் தெரியும் சுயரூபம் சுயமானதா இல்லையா என்பதில் தான் இருக்கிறது கண்ணாடியின் சிறப்பு. அறிமுகமே ஒரு தனிமுகம்தான். லா. . ரா. வின் எழுத்து கண்ணாடி போன்றது.

வெளிச்சத்தில் பார்க்கவேண்டிய கண்ணாடி. உள் வெளிச்சத்தில்.

சரி. சரி. பாராட்டுரைகள் மட்டும் போதுமா? பெரியோரைப் புகழ்வதில் அலுப்பு வருமா என்ன? பெரியோரைப் புகழ்வோம். ஆனால் பாற்கடலைப் பற்றிப் பேசினால் போதுமா? போதவே போதாது.

தனது பதினைந்து பதினாறாவது வயதிலிருந்து எழுதிக்கொண்டிருக்கும் ஒருவர் சுமார் எழுபது ஆண்டுகளில் கிட்டத்தட்ட இருநூறு சிறுகதைகள் தாம் எழுதியிருக்கிறார். இவ்வளவு தானா என்று ஆச்சரியப்படத் தேவையில்லை. அவரின் 'அஞ்சலி' தொகுப்பில் ஐந்து கதைகளை அவர் செதுக்கிச் செதுக்கிச் செம்மைப்படுத்தப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆனதாக அவரே குறிப்பிடுகிறார். அதில் மட்டுமில்லை. எப்போதுமே உரு ஏற்றி ஏற்றி எழுதுவார். எழுதுவது என்பது ஒரு தவம். "நான் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளவில்லை" என்று அவர் கூறும்போது தெறிக்கும் பொறி நம்மீதும் பட்டுச் சிதறுகிறது.

"
அமரத்துவம் எதற்கு? அமிர்தம் உண்ணத்தான்" - இப்படி அவர் கூறுவதைத் திரும்பத் திரும்பப் படித்துப் பாருங்கள். யோசியுங்கள். மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகளை உங்கள் மீது உரசவிடுங்கள்.

"
நெருப்பு என்று சொன்னாலே நாக்கு சுட்டு விட வேண்டும்; எழுதிய காகிதத்தின் தீசல் வாசனை நாசியைத் துளைத்திட வேண்டும்" என்கிற லா. . ரா. "சொல்லுக்கும் பொருளுக்குமுள்ள இடைகோடு அழிய வேண்டுமென்ற ஆசை எனக்குண்டு" என்று ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார். "தான் செதுக்குவதே அந்த இடைக்கோட்டை முடிந்தவரையில் அழிக்கத்தான்" என்பவரின் வார்த்தைகளைப் படிக்க நமக்கு எவ்வளவு பொறுமையும் உணர்ச்சியும் வேண்டும்.

அவர் ஒருமுறை தம்மைப் பற்றிக் குறிப்பிடும்போது, "பொதுவாக ஒரு தத்துவ சாரமும் உக்கிரமான ஆத்மதாபமும் என் எழுத்தின் உள்சரடாக ஓடுவதே என் தனித்வம்" என்கிறார்.

"
யாருக்காக எழுதுகிறீர்கள்" என்ற கேள்விக்கு "எனக்காகத்தான்" என்று கூறுபவர், அதே சூட்டோட இதையும் கூறியிருக்கிறார்: "தன்னுள் இருப்பது, தன்னால் சொல்ல முடியாதது இந்த எழுத்தில் எப்படி வந்தது என்று வாசகனை நெகிழ்ச்சிக்குள்ளாக்க வேண்டும். வாசகனுக்கு வார்த்தையின் நோயைத் தொற்ற விடுவேன்; வாசகனுக்கு நமநமன்னு இருக்கணும்; என்னுடைய விண்விண்ணை அவனுக்குப் பரவ விடுவேன்; இரண்டு பக்கமும் சேர்ந்துதான் கம்ப்ளீட் ஆகிறது."

முரண்பாடு போல் தோன்றினாலும் முரண்பாடு ஒன்றுமில்லை. "எனக்காகத்தான்" என்பதில் அகங்காரத்தை விட தன்னுள் தவிக்கும் உள்ளுணர்வை வெளிப்படுத்தும் ஆதங்கமும் ஆவேசமும் தான் இருக்கின்றன.

அவரின் சிறுகதை 'பாற்கடல்'. அவர் செதுக்கிச் செதுக்கி எழுதினது. கூட்டுக்குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டவள் ஜகதா. தலைத்தீபாவளி. ஆனால், கணவனோ அலுவலகவேலை விஷயமாக வெளியூரில். கதை ஆரம்பிக்கிறது - "நமஸ்காரம், ஷேமம். ஷேமத்திற்கு எழுதவேணுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். நீங்களோ எனக்குக் கடிதம் எழுதப் போவதில்லை. உங்களுக்கே அந்த எண்ணமே இருக்கிறதோ இல்லையோ? இங்கே இருக்கும் போதே, வாய் கொப்புளிக்க, செம்பில் ஜலத்தை என் கையிலிருந்து வாங்க, சுற்றும் முற்றும் திருட்டுப்பார்வை, ஆயிரம் நாணல் கோணல். நீங்களா கட்டின மனைவிக்கு கடிதம் எழுதப் போகிறீர்கள்? அதனால் நானே முந்திக் கொண்டதாகவே இருக்கட்டும். அகமுடையான் உங்கள் மாதிரியிருந்தால்தானே, என் மாதிரி பெண்டாட்டிக்குப் புக்ககத்தில் கெட்ட பேரை நீங்களே வாங்கி வைக்க முடியும்? 'அவள் என்ன படிச்ச பெண், படிச்ச படிப்பு எல்லாம் வீணாய்ப் போகலாமா? ஆம்படையானுக்குக் கடிதாசு எழுதிக்கிறாள்!' என்று வீட்டுப் பழைய பெரியவாள், புதுப் பெரியவாள் எல்லாம் என் கன்னத்திலடிக்காமல், தன் கன்னத்திலேயே இடித்துக்கொண்டு, ஏளனம் பண்ணலாம்! பண்ணினால் பண்ணட்டும்; நான் எழுதியாச்சு. எழுதினது எழுதினதுதான். எழுதினதை நீங்கள், தலைத்தீபாவளியதுவுமாய், அவ்வளவு தூரத்திலிருக்கிறவர், படித்தது படித்ததுதான். எழுதினதைப் படித்தபின், எழுதினவாளும், படித்தவாளும் குற்றத்தில் ஒண்ணுதானே? வேறு எதிலும் ஒற்றுமையிருக்கிறதோ இல்லையோ?.."

"
எழுதினதைப் படித்தபின், எழுதினவாளும், படித்தவாளும் குற்றத்தில் ஒண்ணுதானே?" என் உள்ளம் சிலிர்த்தது, முதல் தடவை படிக்கும்போது. இப்போதும் அப்படியே. மனைவி கணவனுக்கு எழுதும் கடிதம் மட்டும் தானா? இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள். தவிப்பு, சோகம், கோபம், பாசம், அன்பு, ஆத்திரம், தியாகம், என்று ஒரு குடும்பத்திலிருக்கும் உணர்ச்சிகள் அனைத்தையுமே கோடிட்டுக் காட்டும் கதை. 'பாற்கடல்' பொங்கிப்பொங்கி இப்படி முடிகிறது - "குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்து லக்ஷ்மி, ஐராவதம், உச்சஸ்ரவஸ் எல்லாம் உண்டாயின. அதிலிருந்து முளைத்துத்தான் எனக்கு நீங்கள் கிட்டினீர்கள். ஆலகால விஷமும் அதிலிருந்துதான் உண்டாகியது; உடனே அதற்கு மாற்றான அம்ருதமும் அதிலியே தான்..."
 

இறப்பைப் பற்றி எழுதாத எழுத்தாளர்கள் இருக்கிறார்களா? அபத்தமான கேள்வியோ? இறப்பின் நிழல் மனதில் படியாத மனிதர்கள் உண்டோ!

லா. . ரா. தனது 'விளிம்பில்' எழுதுகிறார்: "...சாவுக்கும், வயதுக்கும் சம்பந்தமில்லை, எந்த வயதிலும் சமாதானமுமில்லை. வாழ்க்கையில் சலிப்பும், உடலின் தேய்வும் என்னவோ உண்மைதான். ஆனால் சடலத்தைக் கழற்றியெறிய மனமில்லையே!......ஒரு எண்ணம் தோன்றுகிறது. சாவை எமதர்மனாகப் பார்க்கிறோம். ஏன், சாவின் தேவதை பெண்ணாய் இருக்கக்கூடாதா? மரணம் அவனைத் தழுவிற்று என்கையில் (அபூர்வமான ப்ரயோகம்தான்) அந்தத் தழுவல் ஏன் பெண்பாவனையில் இருக்கக்கூடாது? கிழவனுக்கு இந்த வயதில் இந்தச் சபலமா என்கிறீர்களா? ஜீவனுக்கு ஜீவனாகட்டும், ஜீவனுக்கு ஆத்மாவாகட்டும், ஜீவன் எப்போதும் தேடுவதும் ஏங்குவதும் சொஸ்தமாக்கும் ஸ்பரிசத்துக்கும் ஆதரவுக்கும் தானே! பெண்ணென்றால் சபலபுத்தியுடன்தான் பார்க்க வேண்டுமா? தாயின் அணைப்பை எதிர்பார்க்கக் கூடாதா? மரணம் உள்பட ஜீவராசிகளின் சர்வ இயக்கங்களும் அகிலாண்டேசுவரி ஜகன்மாதாவின் ஆட்சிமைக்கு அடங்கியது தானே! மரணத்தின் கருணையை எப்போது நாம் மனமார உணரப் போகிறோம்?....(ஃபாதிமா) கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவள். அந்த மதக்கோட்பாடின்படி Judgement Day என்று ஒரு நாள் உண்டு. கர்த்தரின் தீர்ப்புகள். கேப்ரியல் எனும் தேவதூதனின் எக்காளத்தின் ஊதலில், இறந்தவர் அனைவர் உயிர்பெற்று அவரவர் கல்லறையினின்று எழுந்து கடவுள் முன் நிற்பர். 'உனக்கு வாழ உயிர் கொடுத்து உலகுக்கு அனுப்பினேனே, அங்கு உன் உயிரோடு என் செய்தாய்?' என்று ஸர்வ பிதா ஒவ்வொருத்தராய்க் கேட்பார். அவரவரின் பதிலுக்கேற்ப (அவரிடம் எதையும் மறைக்க முடியாது) தீர்ப்பும் தண்டனையும் வழங்கப்படும். அப்போது என்முறை வருகையில் 'நீ என்ன செய்தாய்' என்று அவர் கேட்கையில், சொல்வேன்; சொல்ல முடியும். 'இதோ என் எழுத்தின் மூலம் உங்களுடைய நாம ரூபத்துக்கு, ரூபநாமமாக என் வாணாள் முழுவதும் உங்களுக்கு என் அர்ச்சனை.' அவர் என்னைத் தூக்கி மடியில் வைத்துக்கொள்வார். இப்படி நினைப்பதில் ஒரு தென்பு, நிறைவு. என்னிடம் ஒப்படைக்கப்பட்ட எழுத்தை ஒழுங்காக, அவர் பெயரில் பயன்படுத்தியிருக்கிறேன் எனும் உணர்வே போதும். இதுவே என் விதிப்பயனைக் கண்டதுதான். ஆனால் இப்படி நினைப்பதில்கூட ஏதேனும் அர்த்தமிருக்கிறதோ? ஃபாதிமா நோக்கில் 'அவர்'. என் பாஷையில் 'அவள்'. எனக்கொரு ஆசை: அதை வெளியிட இங்கேதான் சமயம். என் இறுதி வேளை நெருங்கிக்கொண்டிருக்கும் சமயத்தில் இதுவே என் பெரிய ஆர்வம். கடைசிவரை எழுத்தில் ஈடுபட்டிருந்தேன் என்கிற image உடன் உயிர் நீத்தல் வேண்டும். ஆனால் அது என் இஷ்டத்தில் இல்லையே. அந்தக் காலத் தருமப்படி சுத்த வீரன் படுக்கையில் சாகலாகாது. மரணம் வாழ்க்கையின் மானபங்கம் என்று எனக்கு ஒரு கருத்து உண்டு. நீண்ட நோய்வாய்ப்பட்டு, வாணாள் முழுவதுமாகச் சேமித்த கௌரவமும் பெருமையும் கரைந்து போவதை எப்படி விரும்ப முடியும்? உண்மையில் மரணத்துக்குப் பயப்படுகிறோமா, வாழ்வுக்கு பயப்படுகிறோமா? குழப்பமாயிருக்கிறது. இதென்ன இயற்கையின் நியதியுடன் சண்டை போடுவது முட்டாள்தனம் என்று எனக்குத் தோன்றவில்லையா? ஆனால் மனம் எண்ணாமல் இல்லையே! எல்லாம் அவளுக்குத் தெரியும். அவள் என்ன சத்தியம் மறந்தவளா? அவளுக்கே விட்டுவிடுகிறேன். விட்டுவிடாமல் வேறு என்ன செய்ய முடியும்?"

'
சடலத்தைக் கழற்றியெறிய மனமில்லையே' என்கிற ப்ரயோகத்தில் இருக்கும் வார்த்தை மற்றும் அர்த்த உருமாற்றத்தை என்னவென்பது? உயிர் இருக்கும்போதே சடலமா? கீழே கிடந்தால்தான் சட்டையா. போட்டிருந்தாலும் சட்டையே என்று சொல்கிறமாதிரி தோன்றுகிறது. மேலே "சொல்ல முடியும்" என்பதில் தெரியும் பெருமிதமும் உண்மையும் கலந்த கலவையை உணர்ந்தீர்களா? அவர் தன் எழுத்தின் தன்மையையே அதில் உணர்த்திவிடுகிறார். அவரின் 'அவள்'-லில் படரும் உள்ளப்பூர்வமான உணர்ச்சியும் உண்மையும் நிழலாய் புரிகிறவரை மீண்டும் மீண்டும் அதையே படியுங்கள்.
 

சிந்தனையின் புரிந்தும் புரியாத உணர்வை சொற்களில் கொண்டு வர முயற்சித்தவர். வயதான காலத்தில் தனக்குத்தானே தன் நினைவுகளை அசைபோட்டுக்கொண்டே ஆழ்கடலினுள்ளேப் போய் மனதின் அசைவுகளை வெளியே எடுக்க முயன்று எழுதினது: "...சில உண்மைகள் - எனக்கே புதிதாய், அவைகளுக்குரிய பாஷையில் - அந்த பாஷையும் புதிது - தாம் வெளிப்பட என்னைக் கருவியாக்கிக் கொள்கின்றன. இவைகளை உண்மை என்று குறிப்பது போதாது. இவை ஆதி அந்தம் இலாத, அல்ல இதுவரையும் காண இயலாத ஆதார ஸ்ருதியிலிருந்து தெறித்தத் திவலைகள்...ஸ்ருதிக்கும் எண்ணங்களுக்கும் இடைநிலை ஒன்று உண்டு என்று இப்போது உணர்கிறேன். ஸ்ருதியை அடையாளம் கண்டுகொள்ளும் நிலைதான் ப்ரக்ஞை. எனக்குள்ளேயே இருந்து கொண்டு என்னுள்ளேயே அவ்வப்போது தலைகாட்டிக்கொண்டு, சகல ஜீவராசிகளின் தனித்தனி தன் உணர்வுக்கும் அதே சமயம் அவைகளின் சிருஷ்டி ஒருமைக்கும் இடை விளிம்பு நிலை...தரிசனத்தின் ஆசை காட்டும் ப்ரக்ஞையே உனக்கு அஞ்சலி. ஆணும் பெண்ணும் எனப் ப்ரக்ஞையின் பிளவு சாமான்யமானதா என்ன? நம் ஒருமையை நானும் நீயுமாகப் பங்கு கொள்கையில், நம் நிறைவு பெருக்கெடுக்கின்றது. நான் ஆண். நீ பெண். உன் உடல் கூறினால் அவ்வப்போது உன் உறவிலும் உள்ளத்தின் தன்மையிலும், நீ வேறுபடினும், உண்மையில் என்னினின்று நீ வேறு அன்று. வெவ்வேறு பிம்பங்களைக் காட்டுகிறாய். அது உன் மஹிமை. அதிசயிக்கிறேன்...உன்னைத் தேடித்தேடி உன்னை நான் அடைய வேண்டாம். வேண்டுமா? உன்னைத் தேடுவதில் காணும் மகிழ்ச்சியே, பரபரப்பே, என் தனிமையின் சோகமே, என்னுடைய இந்த ஆயுசுக்குப் போதும்...நீயும் நானும் என நேர்ந்த பிரிவு புவனத்துக்கே மகத்தான விபத்து. இந்த விபத்துக்கு என் அஞ்சலி. நாம் இனி ஒன்றப் போவதில்லே. ஒன்றுவதற்கில்லை. அவ்வப்போது நம்மிடையே நேரும் தருணங்களில் தன்னைக் காட்டிக்கொள்ளும் தன்னிறைவில் அமரத்வத்தின் தன்மையை அறிவோம்."

'
தேடுதலே முடிவு', 'தன்னிறைவில் அமரத்வம்', என்பதைப் படிக்கும் போது காதல், பக்தி, சிருஷ்டி ரகசியம், என்று பலப்பல பூக்கள் நம்முள் மலரும் அழகை வார்த்தையில் வடிக்க முடியுமா என்ன! அவள் அவளே தான்.

லா. . ரா. வின் விவரிப்பு மனதை விட்டே அகலாத காட்சியாக்கி விடும். அதில் கவித்வம் மாயமாய் நம்முடன் கண்ணாமூச்சி விளையாடும். திருக்குற்றால அருவியைப் பற்றி எழுதுகையில் விவரிக்கிறார்: "என்னுள் கடல் பொங்கிற்று. பொங்குமாக்கடல். அவள் முகம் தெரியவில்லை. முகங்காட்டாள். காட்டுவதற்கில்லை. கண்டவர்க்கு உலகம் உறைந்துபோம். நம் பக்கம் முதுகு காட்டி அதுவும் அதன்மேல் அடவியாய் அடர்ந்த கூந்தலில் மறைந்துபோய் (அருவியெனும் கூந்தல், கூந்தலெனும் அருவி) கவலை வெட்கம் லஜ்ஜை எதுவுமிலாது, நிஷ்களங்கத்தின் ஆனந்தத்தில் புவனத்தின் ஆதிமகள் திளைத்துக் கொண்டிருக்கிறாள். கண்டவர் விண்டிலர். ஆகவே, நினைவின் ஊடுருவல்..அது காலத்துக்குக் கட்டுப்பட்டது அன்று. அவள் அதில் குளிக்கும் நித்யயௌவ்வனி. அருவி அவள் யௌவ்வனத்தால் புதுப்பிக்கப்படுகிறதா? அல்லது அவள் அருவியில் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறாளா? இந்தக் கேள்வியின் வசியம் மனம் தன்னையிழந்து காலத்துக்கும் அதில் திளைத்துக் கொண்டிருக்கமுடியும். ஆசை என்னுடையது. ஆனால் அருள் அவளுடையது. ஒவ்வொரு நொடியும் அவளுடையது என்று அறியும் நேரம் இது..."

அடுத்த தடவை குற்றாலம் போகும்பொது, நேரே அருவிக்குப் போய் குளிக்கிறதை மட்டும் குறியாய் வைக்காதீர்கள். கொஞ்சம் தூரத்திலிருந்து அருவியைப் பார்த்துப்பார்த்து தன்னையும் மறங்களேன்.

"
லா. . ரா. வின் சிறுகதைகள் - ஆக்கமும் உருவும்" என்கிற தலைப்பில் Ph. D. ஆய்வுரை எழுதியிருக்கும் திருமதி பாதிமா ஜேஸுமணி லா. . ரா. விடம் சொல்வதை லா. . ரா. எழுதுகிறார் - "ஐயா, நீங்கள் வெளியிட்டிருக்கும் எண்ணங்கள், சிந்தனைகள் பல, எங்கள் எண்ணத்தின் சக்திக்கு அப்பாற்பட்டவை. அதேபோல், அவை வெளிவந்திருக்கும் சொல் உருவம், வார்த்தைக் கட்டுக்களும் எங்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இவை உங்கள் மூலம் வெளி வருவதற்கென்றே ஆண்டவன் உங்களைப் பிறப்பித்திருக்கிறார்."

 

இதன் பிறகு லா. . ரா. வின் பாதங்கள் தொட்டுத் தன் கண்களில் ஒற்றிக்கொள்கிறார். இதை லா. . ரா. இப்படி விவரிக்கிறார் - "மெய்சிலிர்த்துப் போனேன். நான் பெருமை உணரவில்லை. ஒருவிதமான லேசான பயம்தான் தெரிந்தது. அதே சமயம் ஒரு 'வெறிச்'. இது நம்பிக்கை இழந்த சூன்ய 'வெறிச்' அன்று. தன்னுள் யாவற்றையும் அடக்கி நிறைந்து, கவித்வமான விசனத்துடன் தன்னிகரற்ற தனிமை கொண்ட அரூபத்தின் 'வெறிச்'. இதுவேதான் தருண நிலையோ? அவள் இப்படியும் தன்னைக் காண்பித்துக் கொள்வாளோ? கொள்கிறாளா?"

'
நீங்கள் மட்டும் என்ன உலகத்தைப் புதுப்பிக்கிறேளா?' என்றுக் கேட்ட கணவனிடம் பதில் சொல்லும் மனைவியின் உணர்ச்சியைப் படம் பிடித்துக்காட்டும் அழகைப் பாருங்கள். அதில் இழையாய் ஓடியிருக்கும் சூட்சுமத்தின் தாக்கத்தை என்னவென்பது: "நிச்சயமாய் உலகத்தைப் புதுப்பிக்கத்தான் செய்கிறோம். நாங்கள் பெற்கும் ஒவ்வொரு குழந்தையும் பின் என்னவாம்? ஆண்கள். அவர்களுக்கென்ன! அவர்கள் வெறியில் குழந்தையைத் தந்துவிட்டுப் போய்விடுகிறார்கள். பெண்கள் தெரிந்தே வாங்கிக் கொள்கிறோம். சுமக்கிறோம். பத்து மாதங்கள். எங்கள் வயிற்றில் ஒரு உலகமே வளர்கிறது. இரட்டை ஆனால் இரண்டு உலகங்கள்! அப்படியும் பிண்டம் வெளியில் விழுந்ததும் எங்கள் பொறுப்பும் வேலையும் ஒழிஞ்சி போச்சா? 'குழந்தை பிறக்கணுமே' -ன்னு முன்னால் எத்தனை விரதங்கள், பட்டினிகள்! பிறந்ததும் அது கண்டங்கள் தாண்டிப் பிழைத்து உயிர் நீடிக்கணுமேன்னு எத்தனை பத்தியங்கள், பட்டினிகள், கண்விழிப்புகள். 'அழறதா?' -ன்னு மெப்புக்குக் கேட்டுவிட்டு, நீங்கள் திரும்பிப் பார்ப்பது இல்லை. தன் தூக்கம் கெடறதேன்னு ஒண்ணு எங்களை வெளியே துரத்துவேள் அல்லது தலகாணியையும் போர்வையையும் எடுத்துண்டு நீங்கள் வெளியே போயிடுவேள். எத்தனை ஸஹித்துக் கொள்கிறோம்! எப்பவும் குழந்தைக்காக. அப்படி வளர்த்தது பின்னால் குமரக்கடவுளாவோ, கோபாலனாவோ மாறினால் உலகத்தின் வெளிச்சத்துக்காக. இல்லை சூரபத்மனாகவோ, ஹிரண்யனாகவோ மாறினால் அது வயிறு திறந்த வேளை. நாம் என்ன சொல்வோம்!"

கணவனுக்குத் தூக்கிவாரி போடுகிறது. லா. . ரா கணவனாய் எழுதுகிறார் - "அம்மாடி! உன்னுள்ளே இத்தனையா? ஆவேசத்தில் சொற்கள் அடுக்கடுக்காய் வந்து விழுகையில் அவை சிம்மாசனப் படிகளாகத் தோன்றுகின்றன. அதில் அமர்ந்ததும், தாய்மையின் சன்னிதானம் அவளை ப்ரபை சூழ்ந்து கொள்கிறது. எதிர் பேச வார்த்தை எங்கே? ஜ்வாலமுகி."

ஜ்வாலமுகி. ஜ்வாலமுகியின் அழுத்தத்தில் மீண்டும் படித்துப் பாருங்கள். அந்தச் சூட்டை உணர்வீர்கள்.

மேலே நீங்கள் படித்தது எல்லாம் பக்குவம் பார்க்க எடுத்த சோற்றுப்பருக்கைகள் அல்ல. உப்பு சரியா என்று சுவைக்க எடுத்த சாம்பார் துளிகள் அல்ல. வீட்டில் பூப்பூக்க விதைக் கொண்டு வைக்கிற சமாச்சாரம். தினமும் காலையில் தண்ணீர் ஊற்றும்போது கொஞ்சம் வளர்ந்திருக்கிறது என்கிற சந்தோஷ விஷயம். பூ மலர்கிறதா என்று தினமும் பார்க்கிற ஊக்கம், எதிர்பார்ப்பு. ஆனால் பூ என்று நினைத்து வைத்தது ஆலமரமாக உருவாகும் மாயம். அதற்குக் காரணம் விதையின் வீர்யம் தானே!


லா. . ரா. எழுத்து புரியவில்லை என்று பலர் சொல்வதில் எதிர்ப்புணர்வைக் காட்டிலும் ஆதங்கமே இருக்கும் என்று விமர்சகர் அபி சொல்லிக்கொண்டு மேலும் எழுதுகிறார்: "நிச்சயமாக லா. . ரா. வின் படைப்பில் புரியாமையின் தவிப்பைவிடப் புரிந்து கொள்வதன் வலிதான் பயங்கரமானது. அறிதோறும் புதிய அறியாமைகள் எதிர் நிற்கின்றன. தெளிவின்மையின் நிரந்தரம் பற்றிய தெளிவு கிடைக்கிறது. இருளின் தீட்சண்யம் அறிமுகமாகிறது."
 

எங்கேயோ எப்போதோ படித்தது இது - எழுத்தாளர் பாலகுமாரன் அவரது  இளமை காலத்தில் ஒரு நாள் தனது தாயாரிடம் "லா. . ரா. படித்தால் புரியவில்லை" என்றுச் சொல்லியபோது, அவரின் தாயார் சொன்னது, "லா. . ரா. புரிகிற வரை நீ எழுத்தாளன் இல்லை. அதைப் புரிஞ்சுக்கோ."

லா. . ரா. வும் இப்படிக் கூறுகிறார்: "காண்பதும் கண்டதில் இழைவதுமன்றிக் கவிதையில் புரிந்து ஆகவேண்டியதென்ன?"

லா. . ரா. வின் ஒரு புத்தகத்தை எடுத்துவிட்டு சிறிது நேரம் படித்ததும் 'புரியவில்லை', 'அலுப்பாக இருக்கிறது' என்று மூடிவைத்து விட்டு பாட்டு கேட்கவோ, திரைப்படம் பார்க்கவோ (வேறு எங்கே? தொலைக்காட்சியில் தான்!!) போய்விடாதீர்கள்.

புரியவில்லை என்றால் என்ன? நாம் புரிந்தா எல்லாம் செய்கிறோம்? செய்யத்தான் முடியுமோ? அனுபவத்தைப் புரிந்துகொள்ளும் முனைப்பில், முயற்சியில் தான் மனிதனுக்கும் மனதிற்கும் விடுதலை. லா. . ரா. ஒரு பாற்கடல். அதில் மூழ்கி நீந்த ஆரம்பிப்பது ஓர் அனுபவம்.

லா. . ரா. - வின் நூல்கள்:
 

புத்ர, அபிதா, கல் சிரிக்கிறது, பிராயச்சித்தம், கழுகு, கேரளத்தில் எங்கோ, பாற்கடல், சிந்தாநதி, முற்றுப்பெறாத தேடல், உண்மையான தரிசனம், ஜனனி, தயா, அஞ்சலி, அலைகள், கங்கா, பச்சைக்கனவு, இதழ்கள், மீனோட்டம், உத்திராயணம், நேசம், புற்று, த்வனி, துளசி, ப்ரியமுள்ள சினேகிதனுக்கு, அவள், விளிம்பில், சௌந்தர்ய, நான், லா. . ரா. வின் படைப்புலகம், லா. . ரா. சிறப்புச்சிறுகதைகள் - 1, லா. . ரா. சிறப்புச்சிறுகதைகள் - 2.


லா. . ரா. - வைப் பற்றின நூல்கள்:

 

1. லா. ச. ராமாமிருதம் படைப்புகள் : ஓர் ஆய்வு - P. M. ஹபிபுல்லா, 1983, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.

2. லா. ச. ராமாமிருதம் சிறுகதைகளில் கருவும் உருவும் - ஃபாதிமா ஜேஸுமணி, 1996, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.
3. The "Incomprehensible" writer: Tamil culture in L. S. Ramamirtham's work and worldview - Gabriella Eichinger Ferro-Luzzi, 1995, Otto Harrassowitz.


இதில் விடுபட்டுள்ள புத்தகங்கள் ஏதாவது இருந்தால் எனக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன் - நன்றி.

 

- இரா. ஹரிஹரன்

 

__________________

 

(2006-ல் மின்னல் இதழில் வெளியானது)
 

மீண்டும் முதல் பக்கம் செல்ல..